Select Location
All Locations
State
Region
City / District
“மேகேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்புக்கு தடை பெற வேண்டும்” - அன்புமணி

“மேகேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்புக்கு தடை பெற வேண்டும்” - அன்புமணி

சென்னை: “மேகேதாட்டு அணை விவகாரத்தில் மத்திய அரசும், கர்நாடக அரசும் செய்யும் கூட்டுச் சதியை உரிய தரவுகளுடன் உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று மேகேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க தடைவிதிக்க வேண்டும்,” என்று தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரியில் தமிழகத்துக்கான தண்ணீரைப் பெறுவதற்காக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராக நடைபெறவிருந்த இரு தரப்பு பேச்சுகள்ளுக்கான கதவுகளை கர்நாடக அரசு மூடியதற்கு பிறகு மிகவும் தாமதமாகத் தான் இந்த முடிவை தமிழக அரசு எடுத்திருக்கிறது என்றாலும், காவிரி சிக்கலில் இது தான் சரியான நடவடிக்கையாகும்.

காவிரி நீர்ப் பகிர்வு, மேகேதாட்டு அணை சிக்கல் ஆகியவை குறித்து கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரை தமிழக முதல்வர் விஜய் நாளை மறுநாள் பெங்களூரில் சந்தித்து பேசுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், கர்நாடகத்திலும் வெடித்துள்ள போராட்டங்களைக் காரணம் காட்டி, இரு தரப்பு பேச்சுகளுக்கு உகந்த சூழல் நிலவவில்லை என்று கர்நாடக முதல்வர் நேற்று அறிவித்ததைத் தொடர்ந்து அங்கு செல்லும் திட்டத்தை முதல்வர் விஜய் கைவிட்டிருப்பதாக அரசு அறிவித்துள்ளது. அதற்கு மாறாக, காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரை உடனடியாக திறந்து விடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக சட்ட அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்திருக்கிறார். ஆகஸ்ட் ஐந்தாம் தேதிக்குப் பிறகு இந்த வழக்கு தொடரப்படும் என்று தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Hindu Tamil 1 hour ago
Home Flash News