மீண்டும் மாரியம்மாவாக நடிக்கக் காத்திருக்கிறேன்: துஷாரா விஜயன்
நடிகை துஷாரா விஜயன் சார்பட்டா - 2 திரைப்படம் குறித்து பேசியுள்ளார். இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் நடிகர்கள் ஆர்யா, துஷாரா விஜயன் நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படம் 2021 இல் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
திரையரங்க வெளியீடாக வந்திருக்க வேண்டிய படம் ஓடிடியில் வந்துவிட்டதே என பலரும் ஆதங்கம் தெரிவித்தனர். காரணம், குத்துச் சண்டையை மையமாக வைத்து கதை உருவாகியிருந்தாலும் ஹிந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் என சில அரசியல்களையும் பேசியிருந்தது. தற்போது, சார்பட்டா - 2 பணிகள் ஆரம்பமாகியுள்ளன. இதிலும், ஆர்யாவே நாயகனாக நடிக்கிறார். இதுவும் தமிழக அரசியலின் முக்கியமான காலகட்டத்தைப் பேசும் முதல் பாகத்திற்கு முந்தைய கதையாக உருவாகவுள்ளது.
இந்த நிலையில், இப்படம் குறித்து பேசிய நடிகை துஷாரா விஜயன், “சார்பட்டா - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கவுள்ளது. மிகவும் ஆவலாக, மீண்டும் மாரியம்மாக கதாபாத்திரத்தில் நடிக்கக் காத்திருக்கிறேன். சர்பட்டா முதல் பாகத்தின் கதைக்கு முந்தைய கதையாக இது உருவாகிறது. கரோனாவால் சர்பட்டா நேரடியாக ஓடிடியில் வெளியானது. ஆனால், இரண்டாம் பாகம் திரையரங்குகளில்தான் வெளியாகும்” எனத் தெரிவித்துள்ளார்.