மேக்கேதாட்டு விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன்? உதயநிதி கேள்வி!
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டாதது ஏன்? என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தவெக அரசின் முதல் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டப்பேரவையில் இன்றுமுதல் பட்ஜெட் உரை மீதான விவாதங்கள் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில், மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானத்தை கொண்டு வந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் பேசியதாவது: ”மேக்கேதாட்டு அணை கட்டுவதை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது?, முழுப் பயிர்க் கடன் எனக் கூறிவிட்டு ஆட்சிக்கு வந்த பிறகு அரைகுறையாக தள்ளுபடி செய்தது ஏன்? மேட்டூர் அணை நீர் திறக்கப்படாததால் குறுவை சாகுபடி செய்யமுடியாமல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் எப்போது கொடுக்கப் போகிறீர்கள்?
மேக்கேதாட்டு பிரச்னை தொடர்பாக முதல்வர் ஒருமுறை மட்டுமே பிரதமரிடம் கடிதம் எழுதியுள்ளார். பேரவையில் தீர்மானம் கொண்டு வந்த பிறகு தில்லிக்கு அனைத்துக் கட்சிகளும் இணைந்து சென்று கடிதம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தேன். அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை இதுவரை கூட்டாதது ஏன்? கர்நாடக முதல்வர் நிதியமைச்சர் நிர்மலா சீதாரமனை சந்தித்து நிதி வழங்க கோரிக்கை வைத்துள்ளார். அம்மாநில எதிர்க்கட்சிகள் அனைவரும் இணைந்து செயல்படுகிறார்கள். தில்லியில் கர்நாடக முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர்கள் சித்தராமையா, பசரவாஜ் பொம்மையா, எடியூரப்பா உள்பட 5 பேர் கலந்துகொண்ட அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்துள்ளது.
ஒரு மாதத்தில் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். நம் மாநிலமும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை எப்போது கூட்டப் போகிறீர்கள்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.