“சட்டமன்றத்துக்குத் தலைவர் சபாநாயகர் தான், முதல்வர் அல்ல” - அமைச்சர் ரமேஷுக்கு ஓபிஎஸ் பதில்!
தமிழக சட்டமன்ற பேரவையின் தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அது மீதான பொது விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரின் போது முதல்வர் விஜய் அவைக்கு வரும் போது ஆளும் கட்சி உறுப்பினர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என அனைவருக்கும் வணக்கம் வைத்த பின் பின்பு தனது இருக்கையில் அமர்கிறார். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்பட திமுக உறுப்பினர்களைத் தவிர அனைத்து உறுப்பினர்களும் முதல்வர் விஜய் வைத்த வணக்கத்தை ஏற்று அமர்கின்றனர். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது.
இந்த நிலையில், 4 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் தமிழக சட்டப்பேரவை இன்று (17.08.2026) கூடியது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், “முன்னாள் முதல்வரும், அவையின் மூத்தவருமான ஓ.பி.எஸ்., சட்டமன்றத்தின் கண்ணியம் குறித்து நமக்கெல்லாம் சொல்லிக் கொடுத்திருந்தார். முதல் முறையாகச் சட்டமன்றத்திற்கு உறுப்பினராக வந்திருக்கக்கூடிய நாங்கள் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம். அதில் எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் கிடையாது. அதே சமயத்தில், பேரறிஞர் அண்ணா சொன்ன ‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு’ என்பதையே தன்னுடைய மூச்சாக வைத்திருக்கக்கூடிய முதல்வர் விஜய்க்கும் அதற்கான கருத்தை இப்போது தெரிவித்துவிட்டார்.
எப்படி கண்ணியம் குறித்து ஓ. பன்னீர்செல்வம் எங்கள் எல்லாருக்கும் சொன்னாரோ, அதேபோல அவரது கட்சியினுடைய எதிர்க்கட்சித் தலைவருக்கும் சிறிதளவாவது சொல்லிக் கொடுக்க வேண்டும். எட்டு கோடி மக்களின் பிரதிநிதியாக இருக்கக்கூடிய முதலமைச்சர் விஜய் அவைக்குள் வரும்போது, அமர்ந்திருக்கக்கூடிய எதிர்க்கட்சித் தலைவர் அந்தக் கண்ணியத்தைச் சொல்லிக் கொடுத்து, எட்டு கோடி மக்களின் முதலமைச்சருக்கு அந்த மரியாதையைத் தர வேண்டும்” எனத் தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், “முதலமைச்சர் வரும்பொழுது ஏன் எதிர்க்கட்சி தலைவர் எழுந்து மரியாதை செலுத்தவில்லை என்ற கருத்தை இங்கே தெரிவித்தார். இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நம்முடைய பேரவைக்கு என்று சில மரபுகள் இருக்கின்றன. இந்த அவைக்கு பேரவைத் தலைவர் தான் தலைவர். அவர் வரும் போது கட்சி வித்தியாசம் இன்றி அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நிற்பது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்ற மரபு. முதலமைச்சராக இருப்பவர்கள் இந்த அவையில் நுழைந்தவுடன் நேராக தங்கள் இருக்கைக்கு சென்று அங்கிருந்து ஒரு வணக்கம் செலுத்திவிட்டு அமர்வதுதான் மரபு. ஆனால் முதலமைச்சர் அவைக்கு நுழைந்து நடந்து சென்று அங்குமிங்கும் திரும்பி வணக்கம் செலுத்திவிட்டு பிறகு தனது இருக்கையில் அமர்கிறார். இது ஒரு புதிய பழக்கமாக இருக்கிறது. இந்த அவையை பொறுத்தவரையில் பேரவை தலைவர் வரும்பொழுதுதான் அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்ற மரபிலிருந்து விலகிச் சென்று முதலமைச்சர் வரும்போதும் எழுந்து நிற்க வேண்டும் என்பதை பேரவைத் தலைவர் தான் முடிவு செய்ய வேண்டும். அதே நேரத்தில் புதிய மரபாக முதலமைச்சர் வரும்பொழுது எழுந்து நிற்க வேண்டும் என்றால், இந்த அவைக்குள் எதிர்கட்சித் தலைவர் வரும்போதும் அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நிற்க வேண்டுமா? என்பதையும் பேரவைத் தலைவர் தான் முடிவு செய்ய வேண்டும்” என்று கூறினார்.