தலையிடக் கூடாது! 3 தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து டி.கே. சிவகுமார் பதில்
கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், எந்த ஒரு மாநிலமும் மற்றொரு மாநிலத்தின் நிர்வாகத்தில் தலையிடக் கூடாது என்று கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் கருத்துத் தெரிவித்துள்ளார். கா்நாடக மாநிலத்தின் சாம்ராஜ் நகா் மாவட்டத்தில் கா்நாடக வனத்துறையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழகத்தைச் மூவா் கொல்லப்பட்டனர். ஒருவா் படுகாயமடைந்தார்.
இந்த சம்பவத்துக்கு, தமிழகம் சார்பில் முன்வைக்கப்பட்ட கண்டனங்கள் குறித்து கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமாரிடம் இன்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "ஒவ்வொரு மாநிலத்துக்கும் என்று சில பிரச்னைகள் இருக்கின்றன. எங்கள் மாநிலத்தை எவ்வாறு பாதுகாப்பது என்பது எங்களுக்குத் தெரியும் என்பதையும் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் தங்கள் பணியைச் செய்யட்டும்; நாங்கள் எங்கள் பணியைச் செய்வோம். அவர்களின் நிர்வாகத்தில் நான் தலையிட விரும்பவில்லை. எங்கள் மாநிலத்தின் கண்ணியத்தை நாங்கள் பாதுகாக்க வேண்டும். அவர்கள் தங்கள் பணியைச் செய்ய வேண்டும்; நாங்கள் எங்கள் பணியைச் செய்ய வேண்டும்" என்று பதிலளித்துள்ளார்.