தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பங்கேற்பில்லை?
புதுச்சேரி: தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பங்கேற்கவில்லை என முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பங்கேற்கிறார் என ஆளுநர் மாளிகை உறுதி செய்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் தென்மாநில முதல்வர்கள் மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2022-ம் ஆண்டுக்கு பிறகு நடக்கவில்லை. இந்நிலையில், 31-வது தென்மாநில முதல்வர்கள் மாநாடு சென்னையை அடுத்த கோவளத்தில் இரண்டு நாட்கள் நடக்கிறது.
இந்நிகழ்வுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை வகிக்கிறார். இதில் தமிழகம், கேரளம், கர்நாடகம், தெலுங்கானா, ஆந்திரம் மற்றும் புதுச்சேரி முதல்வர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. அத்துடன் மாநில தலைமைச்செயலர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். புதுச்சேரியை பொறுத்தவரை மத்திய உள்துறை கட்டுப்பாட்டில் உள்ள யூனியன் பிரதேசம்.