அட்லி - அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’வில் வில் ஸ்மித்?
அட்லி - அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகி வரும் ‘ராக்கா’ படத்தில் நடிக்க ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அட்லியின் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் படம் ‘ராக்கா’. ஃபேன்டஸி படமான இதில், நாயகியாக தீபிகா படுகோன் நடிக்கிறார். இவர்களுடன் ஜான்வி கபூர், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் ஷாருக்கான் நடிக்க இருக்கிறார். அட்லி இயக்கி, அவர் நடித்த ‘ஜவான்’ படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது. அந்த நட்பின் அடிப்படையில் ‘ராக்கா’ படத்தில் ஷாருக்கான் கவுரவ தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். ‘கிங்’ இறுதி பாடல் காட்சியில் இருக்கும் அவர், செப்டம்பரில் ‘ராக்கா’வில் நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ‘ராக்கா’ படத்தின் இந்தக் கூட்டணியுடன் பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக படக்குழுவினர அவரை அணுகி உள்ளனர். வில் ஸ்மித் தொடர்பான காட்சிகள் வெளிநாடுகளில் படம்பிடிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ‘ராக்கா’ படத்தின் முதல் தோற்றம் ஏப்ரல் மாதத்தில் வெளியானது. அதில் அல்லு அர்ஜுன் ஒரு மனித மிருகம் போலான தோற்றத்தில் இருந்தார். படத்தின் போஸ்டரை பகிர்ந்திருந்த இயக்குநர் அட்லி, “‘ராக்கா’ சாதாரணமான ஒரு படம் இல்லை. இது நான் பல வருடங்களாக சுமந்து வந்த ஒரு கனவு. 18 ஆண்டுகளாக நான் யோசித்து வைத்திருந்த ஒரு கனவு. இந்தக் கதை என்னை சோதித்தது, வடிவமைத்தது, வாழ்க்கை முழுவதும் என்னுடன் இருந்தது. இது வெறும் ஆரம்பம் தான்” என்று தெரிவித்திருந்தார்.