தொடங்கியது திமுக அவசர செயற்குழு: கட்சி கட்டமைப்பை மறுசீரமைக்க திட்டம்?
தமிழக அரசியல் களம் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பெரும் மாற்றமடைந்துள்ள நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்று வருகிறது.
சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, கட்சியின் கட்டமைப்பில் மிகப்பெரிய அளவிலான அதிரடி மாற்றங்களையும் மறுசீரமைப்புகளையும் செய்வதற்கு திமுக தலைமை மிக தீவிரமான முடிவுகளை எடுத்து வருகிறது. தேர்தல் பின்னடைவைத் தொடர்ந்து, சட்டமன்றத் தொகுதி வாரியாகக் கள ஆய்வு செய்து பெறப்பட்ட அறிக்கை மற்றும் மூத்த நிர்வாகிகள் குழு அளித்த ஆலோசனைகளின் அடிப்படையில் இந்த செயற்குழு கூட்டத்தில் முக்கிய விவாதங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
குறிப்பாக, தற்போது திமுகவில் அமைப்பு ரீதியாகச் செயல்பட்டு வரும் 78 மாவட்டச் செயலாளர்களின்எண்ணிக்கையை கணிசமாக உயர்த்துவதற்கு மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில், நீண்ட காலமாகப் பதவியில் இருக்கும் மூத்த மாவட்டச் செயலாளர்கள் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவர்களுக்கு மாநில அளவிலான உயரிய பொறுப்புகள் வழங்கப்பட உள்ளன. புதிதாக கட்சியில் சேர்ந்த ஓபிஎஸ், வைத்திலிங்கம் ஆகியோருக்கு மாநில அளவில் பொறுப்புகள் வழங்கப்படுவது குறித்தும் ஆலோசிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களை எதிர்கொள்ளும் வகையில் கட்சியைப்பலப்படுத்துவதே இந்த மாற்றங்களின் முதன்மை நோக்கமாகும் இருக்கும் என திமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது.