இது என்ன பொதுக்கூட்டமா? இபிஎஸ் பேச்சால் பேரவைத் தலைவர் ஆவேசம்!
அதிமுக எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தது குறித்து பேரவையில் இன்று காரசார விவாதம் நடைபெற்றது. அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்பட 6 பேர் ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர்.
இதுபற்றி இன்று பேரவையில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "6 தொகுதிகளின் எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்துள்ளதால் அந்த தொகுதி மக்களின் பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ளது. அந்த பகுதியில் உள்ள பொறுப்பு அமைச்சரால் தொகுதி பிரச்னையை முழுதுமாக அறிந்துகொள்ள முடியாது என்பதால்தான் சட்டப்பேரவை உறுப்பினர் தேவை" என்றார். செங்கோட்டையன்: விரைவாக தேர்தல் நடத்த வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஆர்வம். அதில் மாற்றுக்கருத்து இல்லை. அதிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். அத்தனை பேரும் வெற்றி பெறுவார்கள். அதிலும் மாற்றுக்கருத்து இல்லை. பேரவைத் தலைவர்: நீங்கள் (ஐபிஎஸ்) சொன்னதெல்லாம் வழக்கில் இருக்கிறது. அதை அவைகுறிப்பில் இருந்து நீக்குகிறேன்.
அப்போது இபிஎஸ் பேசும்போது மைக் அணைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கோட்டையன்: எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் வாபஸ் பெற்றது குதிரை பேரம் இல்லையா? இபிஎஸ்: அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அவர் வாபஸ் பெறவில்லை. ஒரு கட்சியில் இருந்து வெற்றி பெற்றுவிட்டு ராஜிநாமா செய்துவிட்டு ஏன் தவெகவில் சேர வேண்டும்?
தொடர்ந்து இபிஎஸ் அவை மரபை மீறி சத்தமாக பேசவே, உடனே பேரவைத் தலைவர் 'இது என்ன பொதுக்கூட்டமா? இங்கு என்ன பொதுக்கூட்டமா நடத்துகிறோம்? முன்னாள் முதல்வர் இபிஎஸ் உணர்ச்சிவசப்படாமல் பேச வேண்டும். உங்கள் உடலை வருத்திக்கொள்ளக்கூடாது என்று சொல்கிறேன். ' என்று ஆவேசமாகப் பேசினார்.