Select Location
All Locations
State
Region
City / District
திருச்செந்துறை சந்திரசேகர சுவாமி திருக்கோயில்

திருச்செந்துறை சந்திரசேகர சுவாமி திருக்கோயில்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருச்செந்துறை சந்திரசேகர சுவாமி திருக்கோயில், ஆரம்பகால சோழர்களின் கட்டிடக் கலைக்கும், கல்வெட்டு வரலாற்றுக்கும் ஒரு மிகச் சிறந்த சான்றாகத் திகழ்கிறது. இத்திருத்தலம் தேவாரம் பாடப்பெற்ற தலங்களின் வரிசையில் ‘தேவார வைப்புத் தலம்’ என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. 9-ஆம் நூற்றாண்டில் முதலாம் ஆதித்ய சோழன் காலத்தில் செங்கல் மற்றும் சுதையினால் அமைக்கப்பட்ட தொடக்ககாலக் கோயில், 10-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முழுமையான கற்களால் ஆன கற்றளியாக மாற்றியமைக்கப்பட்டது. 

முதலாம் பராந்தக சோழனின் மருமகளும், அரிஞ்சய சோழனின் ராணியும், கொடும்பாளூர் வேளிர் தலைவரான தென்னவன், இளங்கோவேளாரின் புதல்வியுமான பூதி ஆதித்த பிடாரி, இக்கற்றளியை பொ.ஆ.10-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டுவித்தார். கருவறை, அர்த்தமண்டபம், முன் மண்டபம், மகா மண்டபத்துடன், செம்பாறாங்கற்களினால் இவ்வழகிய கற்றளி கட்டப்பட்டுள்ளது. ஐந்து நிலைகளைக் கொண்ட ராஜகோபுரமும், நேர்த்தியான சிற்பங்கள் நிறைந்த இருதள நாகர பாணி விமானமும் இக்கோயிலின் எழிலைக் கூட்டுகின்றன. இக்கோயிலில் 50-க்கும் மேற்பட்ட சோழர் மற்றும் பிற அரச வம்சத்துக் கல்வெட்டுகள் செதுக்கப்பட்டுள்ளன. நிலக் கொடைகள், மானியங்கள் மற்றும் நன்கொடைகள் பற்றிய விரிவான பதிவுகள் இதில் இடம்பெற்றுள்ளன. முதலாம் ராஜேந்திரன், முதலாம் குலோத்துங்கன், விக்ரம சோழன், இரண்டாம் ராசராசன், இரண்டாம் ராஜாதிராசன், விஜயநகர அரசன் ரங்கமகாதேவர் ஆகியோர் காலத்திய கல்வெட்டுகள் உள்ளன.

இக்கோயிலின் கல்வெட்டின் மூலமாக, ‘உறையூர் கூற்றத்து பிரம்மதேயம் ஈசானமங்கலம்’ என்ற இத்தலத்தின் அக்காலப் பெயரை அறிய முடிகிறது. இறைவன்: இக்கோயிலின் முதன்மை இறைவன் சந்திரசேகர சுவாமி (மிருத்யுஞ்ஜயேஸ்வரர்) என்ற திருநாமத்துடன் எழுந்தருளியுள்ளார். கிழக்குப் பார்த்த சந்நதியில் வீற்றிருக்கும் மூலவர், சுயம்பு லிங்கமாகக் கருதப்படுகிறார். இறைவி: மானேந்தியவல்லி (சம்ஸ்கிருதத்தில் மிருகதாராம்பிகை) என்ற தனித்துவமான பெயரில் தெற்கு நோக்கிய சந்நதியில் காட்சி தருகிறாள். உலகிலேயே வேறு எங்கும் காண முடியாத வகையில், அம்பிகை தனது கைகளில் மானைத் தாங்கியவாறு காட்சி தருவது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும். பலா மரங்கள் நிறைந்த பகுதியாக இருந்ததால், இதன் தல விருட்சம் `பலாமரம்’ ஆகும்.


Dinakaran 2 hours ago
Home Flash News