Select Location
All Locations
State
Region
City / District
“மனித மாண்புகளுக்கு எதிரானது முதல்வர் விஜய்யின் உடல்மொழி” - திருமாவளவன்

“மனித மாண்புகளுக்கு எதிரானது முதல்வர் விஜய்யின் உடல்மொழி” - திருமாவளவன்

சென்னை: ‘திமுக தலைவர் ஸ்டாலினை கேலி செய்யும் வகையிலான முதல்வர் விஜய்யின் 'உடல்மொழிகள்' கண்ணியமான அணுகுமுறை இல்லை, அது மனித மாண்புகளுக்கு எதிரானது’ என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘காவல் துறை மானியத்தில் முதல்வர் ஆற்றிய பதிலுரையின்போது, திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான ஸ்டாலினை கேலி செய்யும் வகையில் அவரது உடல்மொழி அமைந்திருந்ததாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், முதல்வர் தரப்பில் 'அது உள்நோக்கம் கொண்டதல்ல' என்று விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறது.

எனினும், இதுபோன்ற 'உடல்மொழிகள்' கண்ணியமான அணுகுமுறை இல்லை என்பதையும் மனித மாண்புகளுக்கு எதிரானது என்பதையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சுட்டிக்காட்டுகிறோம்.

எந்தவொரு சூழலிலும் ஒருவரின் 'தன்மதிப்பைக்' குறைத்து மதிப்பிடுவதோ, காயப்படுத்துவதோ நாகரிகம் ஆகாது. தனிநபர் ஒருவரின் மீதான அரசியல் விமர்சனங்கள் என்பது வேறு; தனிப்பட்ட முறையில் ஒருவரின் தன்மதிப்பைக் காயப்படுத்தும் விமர்சனங்கள் என்பது வேறு. கல்வி, பொருளாதாரம், அதிகாரம் போன்ற வலிமையில்லாத எளிய மனிதரையும்கூட காயப்படுத்தும் அணுகுமுறை ஒருபோதும் ஏற்புடையதில்லை.

அகவையில் மூத்தோரை மதிப்பது மனித மாண்புகளில் மிகவும் உயர்ந்ததாகும். எனவே, மாண்பு நிறைந்த ஒரு மகத்தான பொறுப்பிலுள்ள முதல்வர் இனிவரும் காலத்தில் தனது உடல்மொழியில் மிகுந்த கவனமுடன் இருத்தல் நலம் பயப்பதாகும்.


Hindu Tamil 1 hour ago
Home Flash News