பாலைவன தேசத்தில் 7.8 மில்லியன் அவுன்ஸ் தங்கம்... சவூதியின் பொருளாதாரத்தில் புதிய மைல்கல்!
சவூதி அரேபியா என்றாலே நினைவுக்கு வருவது கச்சா எண்ணெய்தான். ஆனால், இப்போது அந்நாடு 'தங்க தேசமாக' உருவெடுத்து வருகிறது. சவூதி அரேபிய சுரங்க நிறுவனமான மாடன், அந்நாட்டின் 4 பகுதிகளில் சுமார் 7.8 மில்லியன் அவுன்ஸ் அளவிற்கு தங்க இருப்பு கண்டறியப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு, இந்த 4 இடங்கள் முக்கியப் புள்ளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. மன்சூரா மசாரா (Mansourah Massarah), இதுதான் மாடனின் 'தங்க மகுடம்'. இங்கு மட்டும் ஒரே ஆண்டில் 3 மில்லியன் அவுன்ஸ் தங்கம் கூடுதலாக கண்டறியப்பட்டுள்ளது.
வாடி அல் ஜாவ் (Wadi Al Jaww), இது புதிய கண்டுபிடிப்பு, முதன்முதலாக இப்பகுதியில் 3.08 மில்லியன் அவுன்ஸ் தங்கம் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. உருக் 20/21 மற்றும் உம் அஸ் சலாம், இந்த இரு பகுதிகளும் இணைந்து சுமார் 1.67 மில்லியன் அவுன்ஸ் தங்கத்தை வழங்கியுள்ளன.