'ஈரானை விட்டு உடனே வெளியேறுங்கள்'-இந்திய வெளியுறவுத்துறை எச்சரிக்கை
ஈரான் நாட்டின் ரியால் நாணயத்தின் மதிப்பு பெருமளவில் சரிவைச் சந்தித்துள்ளது. இதனால் அந்நாட்டில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, அத்தியாவசிய பொருட்களான இறைச்சி, அரிசி போன்ற பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
வருடாந்திர பணவீக்கத்தின் விகிதம் சுமார் 40 சதவீதமாக மாறி இருப்பதால், மக்களின் அன்றாட வாழ்க்கை செலவுக்கான பணத்தின் மதிப்பும் அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் அந்நாட்டு அரசு, மக்களுக்கு வழங்கும் முக்கியமான மானிய எரிபொருள் விலையை உயர்த்தியது.
இந்நிலையில் ஈரானை விட்டு அங்கு வசிக்கும் இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தி உள்ளது. நாட்டை விட்டு வெளியேற முடியாதவர்கள் பாதுகாப்பாக இருக்கும் படியும், வசிப்பிடங்களில் போதுமான அளவு உணவு, தண்ணீர், மருந்துகள் ஆகிய அத்தியாவசிய பொருட்கள் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஈரானில் இணைய சேவை தடைபட்டுள்ளதால் வெளியேற நினைப்பவர்கள் இங்குள்ள தங்களது குடும்ப உறுப்பினர்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.