இனி ரஜினி பட பாடல்களை பயன்படுத்தக் கூடாது... சி.எஸ்.கே-வுக்கு எதிராக சன் டி.வி வழக்கு
ரஜினி பட பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை கோரி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக பிரபல டி.வி நிறுவனமான சன் டிவி நெட்வொர்க் லிமிடெட் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. 10 அணிகள் களமாடும் 19-வது ஐ.பி.எல். தொடர் வருகிற 28-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இந்நிலையில், ஐ.பி.எல் 2026 தொடருக்கான முதற்கட்ட அட்டவணை நேற்று முன்தினம் மார்ச் 11ம் தேதி வெளியானது. அதன்படி, வருகிற 28-ம் தேதியன்று பெங்களூருவில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதுகிறது.
5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மார்ச் 30, திங்கட்கிழமை கவுகாத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக தனது தொடக்கப் போட்டியில் களமாடுகிறது. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக பிரபல டி.வி நிறுவனமான சன் டிவி நெட்வொர்க் லிமிடெட் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர், கூலி மற்றும் ஜெயிலர் 2 ஆகிய படங்களின் பாடல்களை சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனம் தங்கள் விளம்பரங்களில் பயன்படுத்துவதைத் தடுக்கக் கோரியும், இந்த விவகாரத்தில் இடைக்கால தடை கோரியும் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கு இன்று நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சன் டி.வி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜே. ரவீந்திரன், சன் டி.வி நிறுவனம் அனுப்பிய இ-மெயிலுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் லிமிடெட், ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர், கூலி மற்றும் ஜெயிலர் 2 பாடல்களைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டது என்று தெரிவித்தார். மேலும், எதிர்காலத்தில் சி.எஸ்.கே நிர்வாகம் இந்த பதிப்புரிமையை மீறக்கூடாது என்று அவர் கேட்டுக்கொண்டார்.