குருகிராம் மருத்துவரிடம் இருந்து நீட் வினாத்தாளை ரூ.30 லட்சத்துக்கு வாங்கிய ராஜஸ்தான் சகோதரர்கள் கைது
ஜெய்ப்பூர்: குருகிராம் மருத்துவரிடமிருந்து ரூ.30 லட்சத்துக்கு நீட் வினாத்தாளை வாங்கியதாக ராஜஸ்தானைச் சேர்ந்த சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒருவருடைய குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கடந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மே 3ம் தேதி இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் (யுஜி) 2026 தேர்வு நடைபெற்றது.
இந்தத் தேர்வுக்கு முன்கூட்டியே வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்ததால் நீட் தேர்வு நேற்று முன்தினம் ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, சிபிஐ முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. இதில் கேரளா, மகாராஷ்டிர மருத்துவ மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
விசாரணைக்காகச் சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, புதிய தேர்வு நடைபெறும் தேதி அடுத்த 7 முதல் 10 நாட்களுக்குள் அறிவிக்கப்படும் என தேசிய தேர்வு முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது.
இதனிடையே நீட் தேர்வின் நம்பகத்தன்மை குறித்து மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளதோடு, எய்ம்ஸ்- டெல்லி மூலம் தேர்வை நடத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், நீட் வினாத்தாள் கசிவு வழக்கின் பின்னணி ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கிறது. ராஜஸ்தானின் ஜம்வா ராம்கரைச் சேர்ந்த சகோதரர்களான மங்கிலால் மற்றும் தினேஷ் பிவால் ஆகியோர், இந்த ஆண்டுக்கான நீட்-யுஜி வினாத் தாளை குருகிராம் மருத்துவர் ஒருவரிடமிருந்து ஏப்ரல் 26ம் தேதி ரூ.30 லட்சத்துக்கு வாங்கியது தெரியவந்துள்ளது.
இவர்களில் ஒருவர், சிகார் பகுதியில் நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த தனது மகனுக்கு அந்த வினாத்தாளைக் கொடுத்துள்ளார். பின்னர் ஏப்ரல் 29-ம் தேதி அவர்கள் அந்தத் தாளை பலருக்கு விற்றுள்ளனர். ஜெய்ப்பூர் அருகே உள்ள ‘சிகார்' பகுதி, இந்த வினாத்தாள் கசிவு மோசடியின் மையப்புள்ளியாக மாறியுள்ளது. சிகாரில் உள்ள எம்பிபிஎஸ் ஆலோசனை ஏஜென்ட் ராகேஷ் குமார் மண்டவாரியா என்பவர் அந்தத் தாளை வாங்கி, கேரளாவில் எம்பிபிஎஸ் பயிலும் சிகார் மாணவர் ஒருவருக்கு ரூ.30,000-க்கு விற்றுள்ளார்.