தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15% ஆக உயர்வு - காரணம் என்ன?
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் அந்நியச் செலாவணி எச்சரிக்கையை தொடர்ந்து தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு 15% ஆக உயர்த்தியுள்ளது. இந்தியா தனது தங்க நுகர்வில் கிட்டத்தட்ட முழுவதையும் இறக்குமதி மூலமாகவே பூர்த்தி செய்கிறது. இந்நிலையில் அந்நியச் செலாவணிக் கையிருப்பைப் பாதுகாக்க உதவும் வகையில், ஓராண்டுக்கு தங்கம் வாங்குவதை தவிர்க்குமாறு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவுறுத்தினார்.
இந்நிலையில் தங்கம், வெள்ளியின் வெளிநாட்டு கொள்முதலைக் கட்டுப்படுத்தவும் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மீதான அழுத்தத்தைக் குறைக்கவும் எடுக்கப்படும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு 6-லிருந்து 15% ஆக நேற்று உயர்த்தியுள்ளது. இந்த வரி உயர்வு, உலகின் இரண்டாவது மிகப் பெரிய தங்கம், வெள்ளி நுகர்வோரான இந்தியாவில் அவற்றின் தேவையை குறைக்கக்கூடும். வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்க உதவக்கூடும். மேலும், ஆசியாவில் மிக மோசமாக செயல்படும் நாணயங்களில் ஒன்றான ரூபாய்க்கு ஆதரவளிக்க கூடும்.
கடத்தலுக்கு வழிவகுக்கும் என்றாலும் 2024-ம் ஆண்டு மத்தியில் இந்தியா வரிகளை குறைத்த பிறகு தங்கக் கடத்தல் தணிந்திருந்த நிலையில், தற்போதைய வரி உயர்வு மீண்டும் தங்கக் கடத்தலை தூண்டக்கூடும் என தொழில் துறையினர் எச்சரித்துள்ளனர். தற்போது தங்கம், வெள்ளி இறக்குமதி மீது 10% அடிப்படை சுங்க வரியும் 5% வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரியும் அரசு விதித்துள்ளது. இதன் மூலம் மொத்த இறக்குமதி வரி 6%-லிருந்து 15% ஆக உயர்ந்துள்ளது.