Select Location
All Locations
State
Region
City / District
4 முறை உலக சாம்பியன்... ஜெர்மனிக்கு அதிர்ச்சி கொடுத்த பாராகுவே!

4 முறை உலக சாம்பியன்... ஜெர்மனிக்கு அதிர்ச்சி கொடுத்த பாராகுவே!

4 முறை கால்பந்து உலகக்கோப்பையை வென்ற ஜெர்மனியை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது பாராகுவே அணி. ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடரில் குரூப் போட்டிகள் முடிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறும் நாக்-அவுட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 32 அணிகள் விளையாடும் இந்தச் சுற்றில் விளையாடுகின்றன. இதில், தேர்வாகும் 16 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

நாக் - அவுட் சுற்றின் 3-வது போட்டி 4 முறை உலக சாம்பியனான ஜெர்மனி - பாராகுவே இடையே போஸ்டான் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. போட்டி தொடங்கியது முதலே தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்த ஜெர்மனி மொத்த ஆட்டத்தில் 75% நேரம் பந்தை தன்வசம் வைத்திருந்தது. ஆனால், அதனையும் மீறி பாராகுவே வீரர் மதியாஸ் கலார்சா அடித்த க்ராஸை தலையால் முட்டி கோலாக்கினார் ஜூலியோ என்சிசோ. இதன்மூலம், முதல் பாதியில் 1-0 என்ற கணக்கில் பாராகுவே முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் ஆக்ரோஷமான ஆட்டத்தை ஜெர்மனி வெளிப்படுத்தியது. 54 வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் ஃப்ளோரியன் விர்ட்ஸ் அடித்த பந்தை கை ஹாவர்ட்ஸ் தலையால் முட்டி கோலாக்கி 1-1 என்ற கணக்கில் சமன் செய்தனர்.

கூடுதல் நேரம் வழங்கப்பட்ட நிலையில், ஜெர்மனி வீரர் ஜோனதன் டாஹ் தலையால் முட்டி அடித்த கோல் அணியை வெற்றி பெற வைத்ததாக ரசிகர்கள் கொண்டாடினர். ஆனால், நிலைமை தலைகீழானது. விடியோ மறுஆய்வு மூலம் கண்காணித்தபோது, பராகுவே கோல்கீப்பர் ஆர்லாண்டோ கில்லை ஜெர்மன் வீரர் வால்டெமர் அன்டன் சட்டவிரோதமாகத் தடுத்ததாகக் கருதப்பட்டதைத் தொடர்ந்து அந்த கோல் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இது, ரசிகர்கள் மற்றும் கால்பந்து விமர்சகர்கள் மத்தியில் கடுமையான விவாதங்களைக் கிளப்பியது.

இதனைத் தொடர்ந்து, பெனால்டி ஷூட் அவுட்டுக்கு ஆட்டம் சென்றது. பெனால்டி ஷாட்களுக்கு புகழ்பெற்ற ஜெர்மனி தனது நிதானத்தைக் கைவிட்டதால் ஆட்டம் திசைமாறியது. ஜெர்மனி மற்றும் பாராகுவே அடித்த 5 பெனால்டி ஷாட்களில் தலா 3 கோல்கள் கிடைத்தன. இரு அணிகளும் 2 ஷாட்களை தவறவிட்டன. இதனைத் தொடர்ந்து, ஆட்டம் சடன் டெத் முறைக்கு சென்றது.

சடன் டெத் என்றால் என்ன? இரு அணிகளும் தங்களின் முதல் 5 பெனால்டி ஷாட்களை அடித்த பிறகும் புள்ளிகள் சமமாக இருந்தால், ஆட்டம் ’சடன் டெத்’ நிலைக்குச் செல்லும். இதில், இரு அணிகளும் மாற்றி மாற்றி கோல் அடிக்க வேண்டும். ஒரு அணி கோல் அடித்து மற்றொரு அணி தவறவிட்டால், கோல் அடித்த அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும்.

ஜெர்மனியை வீழ்த்திய பாராகுவே
ஜெர்மனி வீரர் ஜோனதன் டாஹ் அடித்த பந்து கம்பத்திற்கு மேலே பட்டதால் கோல் வாய்ப்பு பறிபோனது. அடுத்ததாக வந்த பாராகுவே வீரர் ஜோஸ் கனாலே, நிதானமாக அடித்த பந்து ஒரு வரலாற்று சிறப்புமிக்க கோலாக மாறி, பாராகுவே-க்கு வெற்றியைப் பெற்றுத்தந்தது. இதன்மூலம், கால்பந்து உலகின் சிறப்பான அணியாகக் கருதப்பட்ட ஜெர்மனியைத் தோற்கடித்து அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றது பராகுவே.

அதுமட்டுமின்றி, பாராகுவே பங்கேற்ற அனைத்து உலகக் கோப்பை பெனால்டி ஷூட்அவுட்களிலும் வெற்றியைத் தக்கவைத்து சாதனை படைத்துள்ளது. முன்னதாக 2010-ல் நடைபெற்ற போட்டியில் பெனால்டி ஷூட் அவுட்டில் ஜப்பானை வீழ்த்தியிருந்தது. அதேபோல, பெனால்டி ஷூட் அவுட்டில் 44 ஆண்டுகளுக்குப் பின் ஜெர்மனி பெற்ற முதல் தோல்வி இதுவாகும். பாராகுவே அடுத்ததாக காலிறுதிக்கு முந்தைய சுற்றில், பிரான்ஸ் அல்லது ஸ்வீடனை எதிர்கொள்ளவிருக்கிறது.


Dinamani 1 hour ago
Home Flash News