Select Location
All Locations
State
Region
City / District
திண்ணையில் படுத்திருந்த நடிகர் பாவா லட்சுமணன் ஓடி வந்து உதவி செய்த அமைச்சர் ராஜ்மோகன்

திண்ணையில் படுத்திருந்த நடிகர் பாவா லட்சுமணன் ஓடி வந்து உதவி செய்த அமைச்சர் ராஜ்மோகன்

வாம்மா... மின்னல். மாயி அண்ணே வந்திருக்காக... மாப்பிள்ளை மொக்கச்சாமி வந்திருக்காக... மற்றும் நம் உறவினர்கள் எல்லாம் வந்திருக்காக... வாம்மா... மின்னல்... என அழைப்பார் பாவா லட்சுமணன். சரத்குமார், வடிவேலு, பாவா லட்சுமணன் இணைந்து நடித்த இந்த காமெடி இன்றும் குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கிறது. தொடர்ந்து வடிவேலுடன் பல காமெடி காட்சிகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வந்தார்.

திரையில் ரசிகர்களை சிரிக்க வைத்தாலும் பாவா லட்சுமணனின் தனிப்பட்ட வாழ்க்கை சோகமயமானது. நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட பாவா லட்சுமணன் கே.கே.நகரில் உறவினர் வீட்டில் தங்கி இருந்தார்.

அப்போது நோய் தாக்கம் அதிகமாகி காலில் விரல்கள் அகற்றப்பட்டது. நோய் தாக்கத்தினாலும், பொருளாதார நெருக்கடியிலும் சிக்கி உறவினர் வீட்டில் இருந்து வெளியேறி சாலிகிராமத்தில் உள்ள சூப்பர் குட் பிலிம்ஸ் அலுவலகத்தின் வாசலில் படுத்திருந்தார். இவரது நிலையை கண்டு மக்கள் தொடர்பாளர் கோவிந்தராஜ், கூல் சுரேஷ் ஆகியோர் லெஜெண்ட் சரவணன் மூலமாக ரூ.2 லட்சம் நிதி உதவி வாங்கி கொடுத்தனர். மேலும் பல திரையுலக பிரபலங்களும் அவருடைய மருத்துவ சிகிச்சைக்கு பணம் கொடுத்தனர். ஒரு பக்கம் நோய் தாக்கம், இன்னொரு பக்கம் வறுமை மற்றும் தங்குவதற்கு வீடின்றி அலுவலக வாசலில் பாவா லட்சுமணன் தங்கி இருந்த தகவல் அமைச்சர் ராஜ்மோகன் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. நடிகர் பாவா லட்சுமணனின் நிலையை நேரடியாக வந்து பார்த்த அமைச்சர் ராஜ்மோகன் உடனடியாக அவரை தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த சேப்பாக்கம் எம்.எல்.ஏ. விடுதி அறையில் தங்குவதற்கு ஏற்பாடு செய்தார். பாவா லட்சுமணனிடம், அமைச்சர் ராஜ்மோகன் ஒரு 6 மாதம் எனக்கு ஒதுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் தங்கி இருங்கள். அதற்கு பிறகு நிரந்தரமாக நீங்கள் தங்கி இருப்பதற்கு இடம் ஏற்பாடு செய்து தருகிறேன் என கூறினார்.

அமைச்சர் ராஜ்மோகனின் செயலை கண்டு நடிகர் பாவா லட்சுமணன் நெகிழ்ச்சி அடைந்து அவருக்கு நன்றி தெரிவித்தார்.


Malaimalar 1 hour ago
Home Flash News