Select Location
All Locations
State
Region
City / District
அரசு பள்ளிகளில் தூதுவர்களாக செயல்பட முன்னாள் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு

அரசு பள்ளிகளில் தூதுவர்களாக செயல்பட முன்னாள் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு

சென்னை: அரசுப் பள்ளிகளை முன்னேற்றும் சீரிய பயணத்தில் அரசு பள்ளிகளில் தூதுவர்களாக செயல்பட முன்னாள் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது. 26221 முன்னாள் மாணவர்கள் தூதுவர்களாக செயல்பட ஏற்கனவே விருப்பம் தெரிவித்துள்ளனர். தேர்வு செய்யப்படும் தூதுவர்கள் 2 ஆண்டுகளுக்கு பணியாற்ற அனுமதி. குற்ற வழக்குகள் பதிவாகி இருந்தால் அனுமதி இல்லை. விருப்பமுள்ள முன்னாள் மாணவர்களை பள்ளி மேலாண்மை குழு மூலம் தேர்வு செய்யும். அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கனவை நிறைவேற்றும் பொறுப்பில் முன்னிற்கிறது தமிழ்நாடு அரசு. இன்று நம் அரசுப் பள்ளிகள் தன் விழுதுகளை உலகம் முழுவதும் வேரூன்றி சிறந்த மனிதர்களை உருவாக்கிய வரலாற்றுப் பெருமைக்குரியது. அவ்விழுதுகளை ஒருங்கிணைக்க விழுதுகள்" முன்னெடுப்பு தொடங்கப்பட்டு சுமார் 8.5 இலட்சம் விழுதுகள் தங்கள் பள்ளியுடன் "நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி" இணையதள பக்கம் வாயிலாகவும் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு வாயிலாகவும் நம் பள்ளி!! நம் பொறுப்பு!! என்ற உணர்வோடு மாணவர்களின் இடைநிற்றலைக் குறைக்கவும் அரசுப்பள்ளிகளில் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கவும், இணைந்து செயல்பட்டு பல்வேறு பங்களிப்புகளை அளித்து வருகின்றனர்.

அரசுப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக ஜனவரி 9, 2024 ஆம் ஆண்டு "விழுதுகள்" என்ற முன்னெடுப்பு தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து இதுவரை 8.5 இலட்சம் முன்னாள் மாணவர்கள் தங்கள் பள்ளியுடன் இணைந்துள்ளனர். மாணவர்களுக்கு சமூக நீதி,சமத்துவம், அறிவியல் பார்வை ஆகியவற்றை நிறைவேற்றும் பொறுப்பில் நமது தமிழ்நாடு அரசும் அரசுப் பள்ளிகளும் என்றுமே முன்னிற்கிறது. அதன் சான்றாக, நம் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் இன்று உலகெங்கும் பல்வேறு துறைகளில் முக்கிய பொறுப்புகளில் பணிபுரிகின்றனர் அரசுப் பள்ளியின் அனைத்து பங்காளர்களும் ஒருங்கிணைந்து தங்கள் பள்ளி மற்றும் மாணவர்களின் மேம்பாட்டிற்கான பொறுப்பை ஏற்கும்போது பள்ளியின் முழுமையான முன்னேற்றம் சாத்தியமாகும். குறிப்பாக, நிலையான பங்காளர்களான முன்னாள் மாணவர்கள் பள்ளியுடன் இணைந்து செயல்படுதல் அப்பள்ளிக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. அரசு பள்ளிகளில் பயின்று பல துறைகளில் சிறந்து விளங்கும் முன்னாள் மாணவர்களை பள்ளித் தூதுவர்களாக நியமிப்பதன் மூலம் மாணவ சேர்க்கை, இடைநிற்றலை தவிர்த்தல், மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டுதல், விளையாட்டுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஒவியப்போட்டி, கலைத்திருவிழா, சிறார் திரைப்படம் திரையிடுதல், மகிழ் முற்றம், வாசிப்பு இயக்கம், வானவில் மன்றம் போன்ற செயல்பாடுகளை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தெரிவித்து பங்கேற்க ஊக்குவித்தல்

அரசுப்பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்களான காலை உணவுத் திட்டம், உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வங்கள், திறன் வகுப்பறைகள், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் உயர் படிப்புகளில் 7.5%, உயர்கல்வியை ஊக்குவிக்கும் புதுமை பெண், தமிழ் புதல்வன் போன்ற அரசின் சாதனை திட்டங்களை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தெரிவித்திடவும் அரசுப்பள்ளியின் மீது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்திடவும், அரசுப் பள்ளியை நோக்கி மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும் முன்னாள் மாணவர்களை பள்ளித் தூதுவர்களாக (School Ambassadors) நியமித்தல். அனைத்து பங்காளர்களையும் ஒருங்கிணைக்கும் நபராகவும், அவர்களை பள்ளியின் வளர்ச்சி சார்ந்த செயல்பாடுகளில் செயல்பட ஊக்குவித்தல். முன்னாள் மாணவ தூதுவர்கள் அப்பள்ளியின் செயல்பாடுகளை, தேவையை, கருத்துகளை அனைவருக்கும் பகிரும் அப்பள்ளியின் முக்கிய பிரதிநிதியாக செயல்படுதல். முன்னாள் மாணவ தூதுவர்கள் அப்பள்ளியின் உட்கட்டமைப்பு மற்றும் பிற தேவைக்காக பெருநிறுவன சமூகப் பொறுப்பு நன்கொடைகள், முன்னாள் மாணவர்கள் நன்கொடைகள் போன்றவற்றை ஒருங்கிணைத்தல் போன்ற முயற்சிகளில் ஈடுப்படுதல். முன்னாள் மாணவ தூதுவர்கள் அப்பள்ளியின் மாணவர்களுக்காக அனைத்து வகையான வாய்ப்புகளை விரிவுபடுத்துதல். தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு முன்னாள் மாணவ தூதுவர்கள் கல்வி சார்ந்த செயல்பாடுகளில் உறுதுணையாக இருத்தல்.

பள்ளித் தூதுவராக விண்ணப்பிக்கும் முன்னாள் மாணவர் சார்ந்த அரசுப்பள்ளியில் குறைந்தபட்சம் இரண்டாண்டு பயின்றவராக இருத்தல் அவசியம். ஒரு பள்ளியில் விண்ணப்பிக்கும் முன்னாள் மாணவர்கள் வேறு அரசுப்பள்ளியிலோ அல்லது சார்ந்த அரசுப் பள்ளியிலோ வேறு பொறுப்புகளில் இருக்கக் கூடாது. எவ்வித சமூக, பொருளாதார, கலாச்சார, அரசியல் வேறுபாடின்றி நடப்பவராக விண்ணப்பிக்கும் முன்னாள் மாணவர் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முன்னாள் மாணவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேறி, பணிபுரியும் துறை மற்றும் சமூகத்தின் மாற்றத்திற்காக செயல்படும் முன்னாள் மாணவராக இருக்க வேண்டும்.

மேற்கண்ட வழிக்கட்டுதல்களை பின்பற்றி பள்ளித் தூதுவர்களாக விண்ணப்பிக்க விருப்பமுள்ள முன்னாள் மாணவர்கள் "நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி" இணையதள பக்கம் வாயிலாக தனிநபராகவோ (அ) தகுதியுள்ள நபர்களின் விவரங்களை சேகரித்து தலைமை ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாம். https://nammaschool.tnschools.gov.in/#/alumni-nomination என்ற இணையதளத்தை பயன்படுத்தி விருப்பமுள்ள முன்னாள் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். பள்ளித் தூதுவார்களை தெரிவு செய்வதற்கான வழிகாட்டுதல்கள்: ஒருமனதாக பள்ளியின் தூதுவர்களாக செயல்பட விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்த முன்னாள் மாணவர்களை பகுப்பாய்ந்து இச்செயல்முறைகளில் மேற்குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை பின்பற்றி பள்ளி மேலாண்மைக் குழு தேர்ந்தெடுத்து தீர்மானம் இயற்றிட வேண்டும். நிறைவேற்றப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழு தீர்மான நகல் மற்றும் தேர்தெடுக்கப்பட்ட பள்ளியின் தூதுவர் விவரங்களை பெற்றோர் செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அரசுப்பள்ளியின் மீது மாணவர்கள், பெற்றோர்கள், மற்றும் பொது மக்களுக்கு நம்பிக்கையை வலுப்படுத்திடவும், அரசுப்பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு முன்னெடுப்புகளில் முன்னாள் மாணவர்களின் பங்கேற்பை உறுதி செய்யும் பிரதிநிதியாகவும், முன்னாள் மாணவர்களை அரசுப்பள்ளித் தூதுவர்களாக, (School Ambassadors) நியமித்தல் சார்ந்து அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தி வழங்குமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகின்றது. மேலும் மாவட்ட அளவில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் உதவி திட்ட அலுவலர் உள்ளிட்ட அலுவலர்களை குழுவாக நியமித்து இப்பணிகளை கண்கானித்திடவும் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது


Dinakaran 1 hour ago
Home Flash News