Select Location
All Locations
State
Region
City / District
“அரசு வழக்கறிஞர் நியமனங்கள் 100% நேர்மையாக நடக்கிறது”

“அரசு வழக்கறிஞர் நியமனங்கள் 100% நேர்மையாக நடக்கிறது” - அமைச்சர் நிர்மல் குமார்

சென்னை: “அரசு வழக்கறிஞர் நியமனங்கள் 100 சதவீதம் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற்று வருகிறது” என்று சட்டத் துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் இன்று கூறியது: “தமிழகம் முழுவதும் அரசு வழக்கறிஞர் பணியிடங்களுக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் அனைத்து ஆவணங்களும், தகுதிகளும் முறையாக சரிபார்க்கப்பட்டு, தகுதியானவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த முறை அரசு வழக்கறிஞர் நியமனம் தகுதி அடிப்படையில் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடைபெறுகிறது.

மாவட்ட ஆட்சியர்களின் சரிபார்ப்பு மற்றும் அனைத்து நிர்வாக நடைமுறைகளும் முடிந்த பிறகே தற்போது அரசாணைகள் வெளியாகத் தொடங்கியுள்ளன. அதற்கு முன்பு எந்த நியமனமும் செய்யப்படவில்லை. அதேபோல் தகுதியற்றவர்கள் நியமிக்கப்படாமல் இருக்க, தற்போதைய அனைத்து நியமனங்களும் 6 மாதங்களுக்கு தற்காலிகமாகவே வழங்கப்படுகின்றன. அதில் அவர்களின் செயல்பாடு, திறமை மற்றும் நீதிமன்றங்களில் அவர்கள் ஆற்றும் பணிகள் மதிப்பீடு செய்யப்பட்ட பிறகே நிரந்தர நியமனம் வழங்கப்படும். மாநிலம் முழுவதும் இந்த முறையில் சுமார் 800 அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

முக்கியமாக முதல்வரின் கரூர் பயணத்தை தடுக்க திமுக தொடர்ந்து முயற்சித்து வருகிறது. கரூரில் நடைபெற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 41 குடும்பங்களை நாங்கள் மறக்கமாட்டோம். அவர்களுக்கு கட்சி சார்பில் தலா ரூ.2 லட்சம் நிதி வழங்க முடிவு செய்யப்பட்டாலும், அதையும் வழங்குவதற்கு எதிராக நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். நீதிமன்றத்தின் அனுமதி பெற்று அந்த நிதியை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று அவர் தெரிவித்தார்.


Hindu Tamil 1 hour ago
Home Flash News