“தமிழகம் ரூ.3,200 கோடி வருவாயை இழக்கும் அபாயம்” - தங்கம் தென்னரசு எச்சரிக்கை
சென்னை: “மக்களவையில் பாஜக அரசு அறிமுகப்படுத்தியுள்ள கனிம வளங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா–2026 காரணமாக தமிழகம் சுமார் ரூ.3,200 கோடி வருவாயை இழக்கும் அபாயம் உள்ளது” என முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மக்களவையில் மத்திய பாஜக அரசு அறிமுகப்படுத்தியுள்ள கனிம வளங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா- 2026, அரசியலமைப்பு உறுதி செய்யும் நிதிக் கூட்டாட்சி தத்துவத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும்.
ஒரு மாநிலம் கொண்டிருக்கும் கனிம வளங்கள் மூலம் எவ்வித வரி வருவாயும் அந்த மாநிலம் ஈட்ட முடியாத வகையில் திருத்தம் மேற்கொள்ளபட்டுள்ள இந்த மசோதாவானது, கடந்த 2024-ம் ஆண்டு ஜூலையில் உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு அமர்வு, பட்டியல் II-ன் 50-வது பிரிவின் கீழ், மத்திய அரசு நிர்ணயிக்கும் ராயல்டியில் இருந்து தனித்து, கனிம வளங்கள் மற்றும் கனிமம் நிறைந்த நிலங்கள் மீது வரி விதிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு உண்டு என்று தெளிவாக உறுதி செய்த தீர்ப்பை மறுக்கிறது.
வருவாய் ஈட்டும் அதிகாரத்தை மாநிலங்களிடம் இருந்து பறிக்கும் வகையில் இந்த சட்ட மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், தமிழ்நாடு சுமார் ரூ.3,200 கோடி வருவாயை இழக்கும் அபாயம் உள்ளது. அந்த வருவாய் மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கும் மக்கள் நலப் பணிகளுக்கும் பயன்படுத்தப்பட வேண்டியதாகும்.
மாநிலங்களின் இயற்கை வளங்களை மாநிலங்களே நிர்வகித்து, அதிலிருந்து கிடைக்கும் வருவாயை அந்தந்த மாநிலங்களே பயன்படுத்தும் உரிமையைப் பறித்து, அதிகாரத்தை மத்தியில் குவிப்பது கூட்டாட்சியின் அடித்தளத்தையே பலவீனப்படுத்தும்.
சீர்திருத்தம் என்ற பெயரில் மாநிலங்களின் நிதி உரிமையைப் பறிப்பதை ஒருபோதும் நாம் ஏற்க முடியாது. தமிழ்நாட்டின் உரிமையையும், வருவாய் ஆதாரத்தையும் பாதிக்கும் இந்த மசோதாவை எதிர்த்து, மாநிலங்களின் நிதி சுயாட்சி மேலும் பறிபோகாமல் நாம் பாதுகாக்க வேண்டும்” என தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.