கேரளா இனி கேரளம்: பெயர் மாற்றத்துக்குப் பின்னால்... - ஒரு தெளிவுப் பார்வை
‘ஒரு தேசத்தின் (மாநிலத்தின்) முகவரி அதன் சொந்த மொழியில் இருக்க வேண்டுமே தவிர, அடக்குமுறையாளர்கள் திணித்த உச்சரிப்பில் அல்ல. தாய்மொழியில் அழைக்கும்போது கிடைக்கும் கம்பீரமும் உரிமையும், ஆதிக்கவாதிகள் சூட்டிய பெயரில் ஒருபோதும் கிடைப்பதில்லை’ என்பது கேரள அரசின் நிலைப்பாடு. ‘கடவுளின் சொந்த தேசம்’ என்று உலகெங்கும் புகழப்படும் ஒரு மாநிலத்துக்கு, உண்மையிலேயே சொந்தமான பெயர் எது? மலையாள மண்ணின் மைந்தர்கள் நெஞ்சாரச் சொல்லும் ‘கேரளம்’ என்ற பெயரா? அல்லது ஆங்கிலேயர்கள் தங்கள் நாவுக்கு ஏதுவாகச் செதுக்கிக்கொண்ட ‘கேரளா’ என்ற பெயரா? - இதன் ஆழமான வரலாற்றுப் பின்னணியையும் சட்டப் பாதையையும் தெளிவாகப் பார்க்கலாம்.
வரலாற்றுப் பின்னணி புராணக் கதைகளின்படி, விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படும் பரசுராமர், 21 தலைமுறை சத்ரியர்களை அழித்த பின், ரத்தம் படிந்த தனது கோடரியைக் கடலை நோக்கி வீசியதாகவும், அதன் விளைவாக உருவான வடக்கு மற்றும் தெற்கு எல்லைகளுக்குட்பட்ட கடற்கரை நிலப்பகுதியே ‘கேரளம்’ அல்லது ‘கேரளா’ என்றும் கதைகள் நம்பப்படுகின்றன. வரலாற்றுப்பூர்வமாக, கி.மு. 3-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பேரரசர் அசோகரின் இரண்டாம் பாறை மரபுக் கல்வெட்டில், மலபார் பகுதி ‘கேரளபுத்ரா’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.