Select Location
All Locations
State
Region
City / District
48 மணி நேரத்தில் உருவாக்கினோம்” - ‘டிசி’ ஹிட் டிராக் குறித்து அனிருத்

48 மணி நேரத்தில் உருவாக்கினோம்” - ‘டிசி’ ஹிட் டிராக் குறித்து அனிருத்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்துள்ள ‘டிசி’ படம் கடந்த 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் வாமிகா கபி நாயகியாக நடித்திருக்க சஞ்சனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்து வருகின்றனர். குறிப்பாக அனிருத்தின் இசையை பலரும் குறிப்பிடும் படி பாராட்டினர்.

இந்த நிலையில் பட வெளியீட்டிற்கு முன்பு டிரெய்லரில் இடம் பெற்று பெரும் ஹிட்டடித்த ‘ராகா ஆஃப் ரிவெஞ் (Raga of Revenge)’ உருவானது குறித்து அனிருத் பேசியிருக்கிறார். ஒரு யூடியூப் சேனலில் அது குறித்த விவரித்த அவர், “இந்த டிராக்கை தனிப்பாடலாக உருவாக்கவில்லை. கேன்ஸ் திரைப்பட விழாவில் படத்தின் டிரெய்லரை திட்டமிட்டிருந்தனர். ஆனால் அங்கு சமர்ப்பிப்பதற்கு இன்னும் 48 மணி நேரம் தான் இருக்கிறது என எங்களுக்கு தெரிய வந்தது. உடனே பின்னணி இசையமைக்க தொடங்கினேன். அப்போதுதான், இந்த இசையை இணையத்திலும் வெளியிட்டால் நன்றாக இருக்குமே என்று நாங்கள் நினைத்து வெளியிட்டோம். வழக்கமாகப் படம் வெளியாகும் தேதிக்கு நெருக்கமான சமயத்தில்தான் ட்ரெய்லரை வெளியிடுவோம். ஆனால் இது பட வெளியீட்டிற்கு வெகு காலத்திற்கு முன்பே வெளியிடப்பட்டது.

முதலில் டிரெய்லரை பார்த்தவுடன் ​​அது கேன்ஸ் விழாவிற்குச் செல்லவிருப்பதால் முடிந்தவரை இந்தியத்தன்மை கொண்டதாக இசையமைக்க வேண்டும் என்பது என் எண்ணமாக இருந்தது. அப்போது, ​​தென்னிந்திய தாளகதியுடன் இந்துஸ்தானி பாணியிலான குரலிசையை இணைத்தால் எப்படி இருக்கும் என யோசித்தேன். இந்தியாவின் வடக்குப் பகுதி மற்றும் தெற்குப் பகுதி ஆகிய இரண்டையும் அவர்களுக்குக் காட்ட வேண்டும் என்பதே என் நோக்கம். முதலில் தாளகதியை உருவாக்கி, அதற்கு முறையான தென்னிந்திய 'பீட்' இருக்க வேண்டும் என அதை இணைத்து அதன் பின்னாலே வட இந்திய இசைக்கூறுகளையும் இணைத்தோம்” என்றார்.


Nakkeeran 1 hour ago
Home Flash News