Select Location
All Locations
State
Region
City / District
1797 நடத்துநர்களை குத்தகை முறையில் நியமிக்க உ.பி. நிறுவனத்துடன் ஒப்பந்தம்: அன்புமணி கண்டனம்

1797 நடத்துநர்களை குத்தகை முறையில் நியமிக்க உ.பி. நிறுவனத்துடன் ஒப்பந்தம்: அன்புமணி கண்டனம்

சென்னை: சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணிப்போருக்கு பேருந்து நிறுத்தங்களில் பயணச்சீட்டு வழங்குவதற்காக 1797 நடத்துநர்களை குத்தகை முறையில் நியமிப்பதற்கான ஒப்பந்தம் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், குத்தகை முறையிலான நியமனங்களை தவெக அரசு கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணிப்போருக்கு பேருந்து நிறுத்தங்களில் பயணச்சீட்டு வழங்குவதற்காக 1797 நடத்துநர்களை குத்தகை முறையில் நியமிப்பதற்கான ஒப்பந்தம் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.எஸ். எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் கோரப்பட்ட ஒப்பந்தப் புள்ளியின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்ட ஒப்பந்தத்தை தவெக அரசு வழங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது.

சென்னை மற்றும் அதையொட்டியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டப் பகுதிகளைச் சேர்ந்த மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் மாநகரப் போக்குவரத்துக் கழகம் 3858 பேருந்துகளை இயக்கி வருகிறது. இவற்றை இயக்குவதற்குத் தேவையான 18,898 பணியிடங்களில் 6,000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், அவற்றை நிரந்தரப் பணியாளர்களைக் கொண்டு நிரப்ப வேண்டிய அரசும், மாநகரப் போக்குவரத்துக் கழகமும் குத்தகை முறைப் பணியாளர்களைக் கொண்டு நிரப்பி வருகின்றன.

அந்த வரிசையில் இப்போது 1797 நடத்துனர்களை குத்தகை முறையில் நியமிப்பதற்கான ஒப்பந்தம் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.எஸ். எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து புதிய நடத்துநர்களை தேர்வு செய்வதற்கான விளம்பரத்தை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அடுத்த சில வாரங்களில் இவர்கள் தேர்வு செய்யப்படுவர். குத்தகை முறையில் நியமிக்கப்படும் நடத்துனர்களின் ஒப்பந்தக் காலம் 11 மாதங்கள் ஆகும். அவர்களுக்கு மாத ஊதியமாக அனைத்துப் படிகள், வருங்கால வைப்பு நிதி பங்களிப்பு உள்பட ரூ.26,743 வழங்கப்படும்.

சென்னையில் அடையார், குரோம்பேட்டை, வடபழனி, தண்டையார்பேட்டை, அயனாவரம், அண்ணாநகர் பணிமனைகளுக்கு உள்ளிட்ட பேருந்து நிறுத்தங்களில் பயணிக்கக் காத்திருக்கும் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கும் பணியில் அவர்கள் அமர்த்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அவுட்சோர்சிங் எனப்படும் குத்தகை முறை நியமனங்களை ஜனநாயகத்திலும், சமூகநீதியிலும் அக்கறை கொண்டு எந்த அரசாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தக் கொள்கைகளில் தவெக அரசுக்கு நம்பிக்கை இருந்தால் மாநகரப் போக்குவரத்துக் கழகம் மட்டுமின்றி, அனைத்து அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் குத்தகை முறை நியமனங்களை ரத்து செய்வதாக அறிவிக்க வேண்டும்; காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் காலமுறை ஊதிய அடிப்படையில் உடனே நிரப்ப வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.


Hindu Tamil 58 minutes ago
Home Flash News